×

சில்லிபாயிண்ட்…

* ஐபிஎல் தொடரில் அறிமுக போட்டியிலேயே அதிக ரன் விளாசிய வீரர் என்ற சாதனை விவ்ராந்த் ஷர்மாவுக்கு கிடைத்துள்ளது. மும்பை இந்தியன்சுக்கு எதிராக நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்க வீரராக அறிமுகமான விவ்ராந்த் (23 வயது) 69 ரன் (9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இதன் மூலம், 2008ல் நடந்த முதலாவது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்வப்னில் அஸ்னோத்கர் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 60 ரன் எடுத்து படைத்த சாதனையை விவ்ராந்த் முறியடித்துள்ளார். கம்பீர் (58*, 2008), படிக்கல் (56, 2020) அடுத்த இடங்களில் உள்ளனர்.

* பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து (மே 28 – ஜூன் 11) விலகுவதாக இங்கிலாந்து நட்சத்திரம் ஆண்டி மர்ரே அறிவித்துள்ளார். ஏற்கனவே நடப்பு சாம்பியன் ரபேல் நடால் (ஸ்பெயின்), நிக் கிர்ஜியோஸ் (ஆஸி.), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) ஆகிய முன்னணி வீரர்களும் இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி அணிகளிடையே அடிலெய்டில் நேற்று நடந்த 3வது டெஸ்ட் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஆஸி. வீராங்கனை மேடிசன் புரூக்ஸ் 25வது நிமிடத்திலும், இந்தியா சார்பில் தீப் கிரேஸ் எக்கா 42வது நிமிடத்திலும் கோல் போட்டனர். கேப்டன் சவிதாவுக்கு இந்த போட்டி 250வது சர்வதேச போட்டியாகும். அடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா ஏ மோதும் ஆட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

* ஜப்பானில் நடக்கும் சீகோ கோல்டன் கிராண்ட் பிரீ தடகள போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் (19 வயது) 3வது இடம் பிடித்து (6.65 மீ.) வெண்கலப் பதக்கம் வென்றார். ஜெர்மனியின் மேரிஸ் லுஸோலோ (6.79 மீ.) தங்கம், ஆஸ்திரேலியாவின் புரூக் புஷ்குவல் (6.77 மீ.) வெள்ளி வென்றனர்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Sillipoint ,Vivrant Sharmah ,IPL ,Mumbai ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு